திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கழுகரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் டாஸ்மாக் பாரும் செயல்படுகிறது. குறிப்பிட்ட பாரில் தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்து மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இரவு 10 மணிக்கு மதுக்கடை மூடிய நேரத்திலிருந்து அடுத்த நாள் கடை திறப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

மடத்துக்குளம் கணியூர் செல்லும் சாலையின் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த இடத்தில், அதிகாலை நேரத்தில் மது வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு பாட்டில்களை சாலையோரத்தில் வீசிச்சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் செல்லும் பலரும் இதனால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கணியூர், மடத்துக்குளம் செல்லும் சாலையில் அனுமதி இல்லாமல் செயல்படும் இந்த பார், பலருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் தொலை தூரமாக செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களும் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மது பாட்டில்களை வாங்கி , மது குடித்து விட்டு வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளன. அரசு மதுக்கடையை ஒட்டி செயல்படும் பார், முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா ? இல்லையா ? என்பதை மதுவிலக்கு துறை போலீசார் ஆய்வு செய்யாதது ஏன்.? அப்படியே அனுமதி பெற்று பார் நடத்தினாலும் அரசு அனுமதி வழங்கிய நேரத்தை விட கூடுதல் நேரத்திலும் மது விற்பனை செய்வதை தடுக்க தவறியது எப்படி ? சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடப்பதை கண்காணிக்காமல் மதுவிலக்கு போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனரா.?
மடத்துக்குளம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை தெரிந்தும், சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்ன.?
இதேநிலை நீடித்தால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை ஆய்வாளர் அறிந்திருக்கவில்லையா ?
சமீபமாக குடிபோதையில் தான் அதிக கொலை, கொள்ளை, குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனை தடுக்க முயற்சிக்கும் சட்ட ஒழுங்கு காவல்துறை போலீசார், முதலில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதையும், பார் நடத்தும் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் குற்ற சம்பவங்களை தடுக்க நினைப்பதும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்த தீர்வும் கிடைக்காது.
எனவே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க சட்ட ஒழுங்கு, மதுவிலக்கு ஆகிய இரண்டு துறையைச் சேர்ந்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
