0 1 min 3 mths

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் ( ஜானி ) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படம் பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது.   இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள், யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும், எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் பேசுகிறது. விதிவிலக்கு இல்லாமல் எல்லா மதமும் இதைத்தான் பேசுகிறது, வயசுக்கு வந்தவுடன் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது கணவனை இழந்த பெண் எந்த ஒரு காரியத்திற்கும் முன் நிற்கக் கூடாது, ஆணுக்குச் சமமான வாழ்க்கையை ஒரு பெண்ணால் வாழ முடிகிறதா என்றால் அது இன்று வரை சாத்தியமற்று தான் இருக்கிறது,

இப்பேற்பட்ட சூழல்களைக் கடந்து ஒரு பெண் தனது தனிமை வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் துணிச்சலாக செயல்பட்டு தன் லட்சியத்தை எவ்வாறு அடைகிறாள் என்பதை பற்றி வேம்பு படம் வலியுறுத்துகிறது.

மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்ற வேம்பு திரைப்படம் செப்டம்பர் -12 ஆம் தேதி ஆஹா ஓடிடி -இல் வெளியாகிறது. அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான இந்தப்படம், சிறந்த நடிகர் ஹரிகிருஷ்ணன், சிறந்த நடிகை ஷீலா என இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

இதுகுறித்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, வேம்பு திரைப்படம் சமூக கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது ஒரு பெண்மைக்கான படமாக மட்டுமல்லாமல் இன்றைய சூழலில் ஒரு தந்தை எப்படி பெண் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சூழலை புரிந்து எப்படி ஆதரவாக இருக்க வேண்டும், குழந்தைகள் தங்களுக்கு என ஒரு கனவு இருந்தாலும் பெற்றோரை எப்படி மதித்து நடக்க வேண்டும் போன்ற பல சென்டிமென்ட்டான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன.

பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களில்  நடித்து கவனம் ஈர்த்த ஜானகி  கண்கலங்க வைக்கும் விதமாக மிகச் சிறந்த அம்மாவாக எதார்த்தமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி உள்ளார். கூத்துப் பட்டறை ஜெயராவ் அப்பா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார், மற்றும்  கூத்து நாடக்கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,

தங்க மகன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.குமரனின் ஒளிப்பதிவு மிகச் சிறந்த அழகிய வாழ்வியலை  திரையில் நிறுத்தியுள்ளது. அதே முகம், ரபேல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மணிகண்டன் முரளி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிருதன் படத்தில் பணியாற்றிய கே.ஜே வெங்கட்ராமன் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநர் கோபி கருணாநிதி படம் யதார்த்தமாக வந்திருப்பதற்கு அவரது கலை இயக்கமும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *