0 1 min 1 mth

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து  திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘லொள்ளு சபா’ சாமிநாதன் பேசுகையில், இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் நடிக்காமல் இயக்குநர் சொன்னதை கேட்டு நடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு மதியம் ஒரு மணிக்கு சென்றேன். இரண்டு மணிக்கு காட்சிகளை படமாக்க தொடங்கினர். நான்கு மணிக்கு என்னுடைய பங்களிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு படத்திற்கு பின்னணி பேசுவதற்காக சென்றேன். அங்கும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான் கிடைத்தது. இப்படத்தின் இயக்குநரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசனையுடன் சொல்லிக் கொடுத்தார் என்றார்.

இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றி.  இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கு நன்றி. என்றார்.

நடிகர் விஷ்வா பேசுகையில்,  இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பேசுகையில், சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவும், ஆசையையும் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடங்கும்போது பேப்பரில் இருந்த இந்த கதையை திரைக்கு கொண்டு வந்து, அந்த உணர்வை அனைவரும் உணர்ந்து ரசித்து பாராட்டும் போது அதை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு அனைவரும் தங்களின் இதய பூர்வமான ஆதரவை தெரிவித்ததை நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள், ரசிகைகள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி என்றார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகிஸ்தர் குகன் பேசுகையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும் மிக அதிகம். இதற்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகள். இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிய திரையுலக பிரபலங்களுக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி’ நடுத்தர குடும்பத்து மக்களின் கதை. இதில் என்ன கதையை இவர்கள் சொல்ல வருகிறார்கள்..?  இது ஒரு சாதாரண கதை. ஆனால் இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

சாதாரண கதையை, அசாதாரணமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். அதனால் தான் இந்தப் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். படத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டார்கள். படம் வெளியான பிறகு படத்தைப் பார்த்த ரசிகர்களிடத்தில் அதன் தாக்கம் அதிகம் இருந்தது. படத்தின் கதையை கேட்டு நடித்த நடிகர்கள் அனைவரும் இதனை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள். அதை திரையில் வழங்கிய விதம் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைவரும் புதுமுக கலைஞர்கள். சினிமா மீது அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வத்துடன் இருப்பவர்கள். இதன் காரணமாகத்தான் இவர்களால் இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடிந்தது என நான் நினைக்கிறேன். இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயணித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் கலந்து கொள்ளும் மூன்றாவது நன்றி அறிவிப்பு விழா இது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்று படங்களில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுக படைப்பாளிகள் என்பது தான் என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.
அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம்.

புது தயாரிப்பு நிறுவனம், புது இயக்குநர், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்ன பட்ஜெட் படம், நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்காக அந்த நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் குகனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. 

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன். ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *