ஆர் ராம் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ்.வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில் உருவாகியுள்ள “DEXTER” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், கடந்த காலங்களில் 175 நாட்கள் தியேட்டரில் படங்கள் ஓடினால் தான் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் அந்த நிலை, தற்போது கிடையாது. இப்போதெல்லாம் படம் வெளியாகி இரண்டாவது நாளே, படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுகின்றனர். அப்போதுதான் ஓடிடியில் படத்திற்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது படங்களை தியேட்டரில் வெளியிடுவதற்கே தயாரிப்பாளர்கள் போராட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். சினிமாவை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் சிறிய படங்கள் கொண்டாடப்படும், ஆனால் சிலரின் ஆக்கிரமிப்பால் சிறு பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர் என வேதனையிடன் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தி விடைபெற்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், DEXTER படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருந்ததாகவும், அதில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரின் பணிகளை பாராட்டியதோடு, பாடலாசிரியர் மோகன்ராஜின் கவிதை வரிகளை புகழ்ந்து பேசினார். நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு மொழிகள் தேவையில்லை, விழிகள் இருந்தால் போதுமானது என, தமிழகத்தில் தற்போது நிலவும் மும்மொழி பிரச்சினையை சூசகமாக சுட்டிக்காட்டி, படக்குழுவினரை வாழ்த்தி விடைபெற்றார்.

பின்னர் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில், படக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள், படக்குழுவினருடன் படத்தின் இசைத்தட்டை வெளியிட்டு சிறப்பித்தனர்.
